அரானா பக்கம்

Friday 14 June 2013

சென்னையின் சித்திரம்


சென்னைஇது ஒரு தமிழ் சொல்லு அல்லது ஒரு நகரத்தின் பெயர் என்பதற்கு அப்பால், நம் வாழ்க்கையின் ஒன்றாக கலந்துவிட்ட மாநகரம். எத்தனை லட்சம் மக்கள் வந்தாலும் தன்னுள் வாங்கிக் கொள்ளும் நகரம், சில நேரம் இலவசமாகவும் சில நேரம் விலை கொடுத்தும். இதன் ஆச்சர்யம் இன்னும் குறையவில்லை. தமிழ்நாட்டின் மிகப்பெரிய வரலாற்றுப் புகழ்ப் பெற்ற மாநகரம், ஆனால் அதையும் தாண்டி ஒரு காந்தவியல் சக்தி சென்னைக்கு உண்டு. பலதரப் பட்ட மக்கள் தன் சொந்த ஊரைவிட்டு இந்நகரில் தங்களுக்கான இடத்தை அடையப் போராடி வருகிறார்கள். சாதாரண மக்களை இந்நகரம் சற்று அதிகமாகவேப் பயமுறுத்தும். வேகத்தடைகள் இருந்தும் வேகம் குறையா மக்களும் சாலைகளும். ஒரு நாள் இங்கே நடக்கும் விபத்துகள், கொலைகள், கொள்ளைகள், ஆள் கடத்தல், அரசியல்வாதிகளின் அறிக்கைகள், போராட்டங்கள், கூட்டங்கள், பிரார்த்தனைகள் இப்படி நிறைய சொல்லலாம், சாட்சி டிவி செய்திகளில் அல்லது காலை மாலை நாளிதழ்கள். ஒவ்வொரு நாளும் ஒரு நொடியைப் போல் ஓடிவிடும். இங்கு எல்லோருக்கும் வேலை கிடைக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவங்களும் சுமையானதாக, சுவையானதாக இருக்கும். எத்தனை துக்கங்கள், சுகங்கள், சந்தோஷங்கள் வந்தாலும் இந்நகரைவிட்டு நாம் நகரப் போவதில்லை, இந்நகரமும் நம்மை விடப் போவதில்லை. இங்கே பல எழுதப் படவேண்டிய கதைகள், கவிதைகள், சுயசரிதைகள் இப்படி நிறைய உலாவிக் கொண்டிருக்கிறது.
சென்னை நகரில் எனக்கு ஏற்பட்ட அனுவங்களை எழுதப் போகிறேன். தினமும் நான் சந்தித்த மனிதர்கள், அபத்தமான நிகழ்வுகள், மன நெருக்கடிக்கு உள்ளாக்கும் தருணங்களை எழுதலாமென நினைக்கிறேன். இது சாதாரண மனிதர்களுக்கு நடக்கும் நிகழ்வுதான், ஆனால் எனக்கு இது ஒரு அனுபவம், அதை உங்கள் முன் பகிர்வதால் உங்களுக்கு ஒரு வழிகாட்டியாக, ஒரு நகைச்சுவையை ரசிக்கும் பார்வையாளனைப் போல இதைப் படிக்கும் உள்ளங்களுக்கு இருக்குமென நினைக்கிறேன். இத்தொடருக்குப் பெயர் கேலிச் சித்திரன்’. அறிமுகவுரை போதுமென நினைக்கிறேன்.
அரானா
கேலிச் சித்திரன் - 1
பயமுறுத்தும் வரவேற்பரை                                          
05/04/2013
சென்னைக்கு கிளம்பும் போதேல்லாம் மனநெருக்கடியும் என்னுடன் சேர்ந்து கொள்ளும். வீட்டைவிட்டு பிரியவேண்டும் என்றாலும் ஏதோ ஒன்று என்னைக் கவ்வியிழுக்கும். மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் படு பயங்கரமாக காட்சியளிக்கும். தனியார் பேருந்துகள் பயணிகளை இழுக்க ஏகப்பட்ட சில்மிஷம் செய்வார்கள். பதிமூன்று வயது சிறுவர்கள் முதற்கொண்டு தனியார் பேருந்தின் ஏஜென்டாக இருப்பார்கள், போலீஸ்காரர்கள் அவர்களை விரட்டுவது, பின் காசை வாங்கி கொண்டு உள்ளே விடுவதெல்லாம் வாடிக்கையான நிகழ்வுகள். மூன்று சாப்பிடுவதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கு. இன்னும் கொடூரமான விஷயம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் உணவகங்கள், மன்னிக்கவும் பணவகங்கள். ஒரு முறை இரண்டே இரண்டு புரோட்டா சாப்பிட்டேன் அறுபது ரூபாய் பணத்தை பிடிங்கிவிட்டார்கள். அதிலிருந்து எந்த வழியில் நான் சாப்பிடுவதேயில்லை. ஏன் இவ்வளவு பணம்? பயணிகள் எல்லோரும் பணம் படைத்தவர்களில்லை, சாதாரண மனிதர்கள் தான். தூக்கம் வராமலிருக்க டீ குடிக்கலாமென்று நினைத்தால் ஒரு டீ பதினைந்து ரூபாய். மக்களும் வேறுவழியின்றி வாங்கி குடிக்கிறார்கள். அனைவருமே என் கண்களுக்கு கொடிய அரக்கர்கள் போல் தெரிவார்கள்.
பின் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் மிகப் பிரம்மாண்டமாக நம்மை வரவேற்கும். தன் மிரட்டும் கண்களைக் கொண்டு புதிதாக வருபவர்களை கொலைவேறியோடு பார்க்கும் பேருந்து நிலையம். எண்கள் தான் இங்கே பஸ்களுக்கானப் பெயர். தனக்கான எண் வரும்வரை காத்திருக்கவேண்டும். கூட்டத்தோடு கூட்டமாக மாறவேண்டும், தன் அடையாளத்தை மறைத்து வாழ பழகிக்கொள்ளவேண்டும். சாலைகள் முதற்கொண்டு சென்னையில் எப்படி நடக்கவேண்டுமென்ற விதிமுறையை சொல்லிக்கொடுக்கும்.
(சித்திரம் தொடரும்)

No comments:

Post a Comment