அரானா பக்கம்

Friday 14 June 2013

முதல் மொழி


அண்ணனுக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்திருக்கிறது, அவனுக்கு காளிதாஸ் என்ற மாதேஷ் என்று பெயர்வைத்திருக்கிறார்கள். காளிதாஸ்பெயர் வைப்பதற்கு காரணமிருக்கிறது. அவனுக்கு கண்ணும் மூக்கும் கொஞ்சம் பெரிசு, அப்படியே அண்ணியின் முகம். பிறந்து மூணு மாசம் ஆச்சு. இப்போது நல்லா சிரிக்கிறான், தூக்கிவைத்துக்கொண்டு நடக்கச் சொல்கிறான், நின்றால் அழுகிறான். செல்லக்குட்டி, தங்ககுட்டி, என எல்லோரும் கொஞ்சுகிறார்கள். அவனும் ஏதோ கத்துகிறான், எதையோ பேச முயற்சிக்கிறான். என்னைப் பொறுத்தவரை அதுதான் தாய்மொழி. எப்போது குழந்தைகள் பேச ஆரம்பிக்குதோ அப்போதே அவர்களிடம் குழந்தைத்தனம் மறைந்துவிடுகிறது, அவர்களுடைய வாசனையும் காணாமல்போகிறது. எனக்குத்தான் அவனிடம் என்ன பேசவேண்டுமென்று தெரியவில்லை. அவனை என்ன சொல்லிக் கொஞ்சுவதென்று தெரியாமல், இந்நாள் வரை முத்தம் கொடுத்துதான் என் அன்பை வெளிப்படுத்துகிறேன். NICK சேனலில் ‘NINJA HATTORI’ என்ற குழந்தைகள் நாடகம் ஒன்று ஒளிப்பரப்பாகிறது. ’NINJA’ பெயர் கொண்ட சிறுவன் செய்யும் சாகசம்தான் நாடகத்தின் கதை. அவனுடைய தம்பி பெயர்சின்சு’. அவனுடையப் பெயரை காளிதாஸ்க்கு வைத்து கூப்பிடுகிறார்கள். இதிலிருந்து அழியத் தொடங்கிறது அவனுடைய வரலாறும் பூர்வீகமும் எல்லாமும். நம் தமிழ்த் தாய்மார்கள் குழந்தைகளை வளர்ப்பதற்காகவே டாக்டர் பட்டம் கொடுக்கலாம். தன் வாழ்க்கையில் பாதி நாட்கள் அவர்களை வளர்ப்பதற்காகவே செலவிடுகிறார்கள். எப்போது அழுவான், எப்போது விழிப்பான், எப்போது தூங்குவான், என்னென்ன மருந்துகள் கொடுக்கவேண்டும் இந்த கேள்விகளுக்கு பதில் அம்மாவின் முகத்தில்தான் தெரியும். என்னைப் பொறுத்தவரை குழந்தைகள் தாயின் சொந்தம் தான்.

No comments:

Post a Comment