அரானா பக்கம்

Friday 14 June 2013

பலியாகும் குழந்தைகள்


நண்பர்களுடன் மெரினா கடற்கரையில் அமர்ந்திருந்தேன், அப்பொழுது ஒரு பெண் குழந்தை அங்கே இருந்தவர்களிடம் காசு (பிச்சை) கேட்டுக் கொண்டிருந்தது. அக்குழந்தையின் தாய் ஓரத்தில் அமர்ந்துகொண்டு வாயில் ஏதோ மென்றுகொண்டே குழந்தையின் செய்கைகளை கவனித்தவாறு இருந்தது. சாராண நிகழும் சம்பவம் போல் என்னால் இதை கடந்து செல்ல முடியவில்லை. தன் குழந்தைப் பிச்சை எடுப்பதை இப்படி ரசித்துப் பார்க்கும் குரூர மனம் இத்தாய்க்கு எப்படி வந்தது என்ற கேள்வி மட்டுமே என்னைத் துரத்தியது. எதிர்காலத்தில் அக்குழந்தையின் மனநிலை எவ்வாறு, சமூகத்தை எந்தக் கண்னோட்டத்தில் பார்க்கும், சமூகம் அக்குழந்தையை என்ன செய்யும், எப்படி சித்தரிக்குமென்று நான் பல யோசனைகளில் என்னுள் வந்துகொண்டிருந்தது. வசதி படைத்தவர்களின் குழந்தைகள் எப்படி வளர்கிறது, வசதியில்லாத குழந்தைகள் எப்படி வளர்க்கப் படுகிறார்கள் என்ற இருவேறு தளங்கிளில் தான் எதிர்கால சமூகம் இயங்கப் போகிறது. தற்போது குழந்தைகளின் உலகம் மாறிவருகிறது. அவர்கள் வாழும் யதார்த்த உலகம் வேறு வாழும் உலகம் வேறு. கல்வி, தொலைக்காட்சி, விளையாட்டு இதைத் தவிர அவர்களின் தேவைகள் என்ன என்பதை நாம் கேட்கவிரும்பவில்லை. நம் சமூகம் கட்டமைக்கும் கோடுகளில்தான் குழந்தைகளின் நடைபாதையாகிறது. டெல்லியில் ஐந்து வயது சிறுமி பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளான சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது, விவாதிக்கப்பட்டது. தற்போது அந்நிகழ்வு இந்தியாவின் ஆவணமாக்கப்பட்டுள்ளது. அச்சிறுமிக்கு தனக்கு என்ன நடந்ததென்று தெரியாத மனம், பெற்றோருக்கோ தன் கனவு மருத்துவமனை கட்டிலில் காயங்களுடன் இருப்பதை கண்ணீர் கண்களோடு பார்க்கும் அவலநிலை. பெண்கள் சில நாட்களுக்கு போராட்டங்கள், கண்டனங்கள், கூட்டங்கள், அவனைத் தூக்கில் தொங்கவிடவேண்டும், துப்பாக்கியால் சுடவேண்டும் போன்ற கோஷங்களை கத்திவிட்டு, ஒரு மாதம் கழித்து காய்கறிவிலைப் பற்றி பேச ஆரம்பித்துவிடுவார்கள். எல்லோருக்கும் இதே மனநிலை தான், தனக்கு ஏற்படும் வரை. தினமும் நாளிதழ்களில் பாலியல் வன்புணர்ச்சி ஆளாகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேவருகிறது. நம் நாடு கலாச்சாரத்தைவிட்டு எப்போதோ பிரிந்துவிட்டது. மிக கொடூரமான சித்ரவதைகள் குழந்தைகள் மீது திணிக்கப்படுகிறது. அவர்களின் அகம் புறம் இரண்டும் அப்பா அம்மாவிற்கு கூடத் தெரிவதில்லை. மனநெருக்கடியில் தான் ஒவ்வொரு நாளும் கடந்துபோகிறது. எதிர்காலத்தில் குழந்தைகள் மீதுதான் அல்லது அவர்களை முன்னிறுத்திதான் சர்வதேச குற்றச்செயல்கள் நடைபெறும். இந்தப் பிரச்சினைக்கு முடிவு காண்பது எளிதல்ல. ஆனால் எல்லோருக்கும் இதில் பங்குண்டு, யாரும் தப்பிவிடமுடியாது.

No comments:

Post a Comment