அரானா பக்கம்

Sunday 3 March 2013

கடந்த காலங்கள்


நானும் என் நண்பன் மதியும் சாத்தூர் போனோம். ரொம்ப நாளாச்சு, எங்களுக்கு ஹிந்தி சொல்லிக் கொடுத்த ஆசிரியைப் பார்த்து, அவர்களைப் பார்ப்பதற்கு போயிருந்தோம். சாத்தூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஆசிரியை வீட்டுக்கு நடந்து போகும் வழியில் ரொம்ப வயசான பாட்டி ஒருவர் ரோட்டில் உட்கார்ந்து பிச்சை எடுத்துக் கொண்டுருந்தார். எங்களிடமும் கேட்டார், இருவரிடமும் சில்லறை இல்லை. ஆனால் மதி பாட்டிக்கு கடையிலிருந்து இட்லி வாங்கி கொடுத்தார். அதை வாங்கி வைத்து கொண்டு மீண்டும் ரோட்டில் போகும் நபர்களிடம் காசுக் கேட்டுக் கொண்டிருந்தார்.
நானும் மதியும் ஆசிரியை வீட்டுக்கு நடையைத் தொடர்ந்தோம். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்து திரும்ப அதே வழியில் பஸ் ஸ்டாண்டுக்கு வரும் போது அதே இடத்தில் அந்தப் பாட்டி உட்கார்ந்திருந்தார். ஒரு நாளைக்கு எத்தனை பேர் இந்த ரோட்டில் போவார்கள் வருவார்கள், எத்தனைப் பேர் இந்தப் பாட்டிக்கு காசு கொடுப்பார்கள் இல்ல எவ்வளவு நபர்களுக்கு பாட்டி இந்த இடத்தில் இருப்பது தெரியும் எனப் பல விடைத் தெரியாத கேள்விகள். சத்தியமாக பதில் கிடைக்காது. நம் நாட்டில் தான் இப்படி தனித்து விடப்பட்ட வயதானவர்கள் அதிகமென்று நினைக்கிறேன். இந்த பாட்டியின் கடந்த காலம் பற்றி யோசிக்கிறேன். குழந்தைப் பருவம், கல்யாணம் வாழ்க்கை, பாட்டிக்கு சொந்தமாக வீடு இருந்திருக்கலாம், எதிர்காலம் பற்றியக் கனவுகள், இதெல்லாம் பாட்டியின் வாழ்க்கையில் நடந்ததா இல்லையா என்று கூட எனக்கு தெரியவில்லை. பாட்டியின் தினசரி வாழ்க்கை சொல்ல முடியாத நினைவுகள் அடங்கியது. பூமியின் சத்தத்தில் பாட்டியின் சிரிப்பொலியும் கேட்காது, அழுகுரலும் கேட்காது. நானும் மதியும் பாட்டியின் பிள்ளைகளைத் திட்டிக்கொண்டிருந்தோம், யாருக்கு தெரியும் பிள்ளைகள் இருக்கலாம் இல்லாமலுமிருக்கலாம். மீண்டும் சாத்தூர்க்கு போனால் அதே இடத்தில் பாட்டி உட்கார்ந்திருக்குமா? மீண்டும் எங்களிடம் ஏதாவது கேட்குமா? மழைக் காலம், கோடைக் காலம், வசந்தக் காலம் எல்லாமே ஒரு இறந்த காலங்கள் தான். இவர்கள் புழுதியில் காணாமல் போன இலைகள். ஒரு மனிதனின் கடந்த காலம் திரும்பி மீட்டெடுக்க முடியாத மீளாத் துயரம். அடுத்தக் கட்டத்தை நோக்கித்தான் வாழ்க்கைச் செல்கிறது.
நீர்ப்பறவைகள்
வருகின்றன, போகின்றன
அதன் சுவடுகள் அழிந்து போய்விடுகின்றன
ஆனால் அது பாதையை மறப்பதேயில்லை
என்ற ஜென் கவிதை ஒன்றுள்ளது.
நமது சுவடும் அழிந்துவிடுகிறது, பாதையையும் மறந்துவிடுகிறாம். ஒரு பக்கம் பெண்கள் விண்வெளி ஆராய்ச்சி முதல் நாட்டை ஆட்சி செய்யும் அளவுக்கு எப்போவோ வந்துவிட்டார்கள். இன்னொரு பக்கம் அவர்களுக்கெதிராகப் பல இன்னல்களும் நடக்கிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பெண்களை பொம்மைகளாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். பொம்மையை அடிக்கலாம், மிதிக்கலாம், திரும்பி அடிக்காதவரை. இப்ப கொஞ்சம் அட்வான்ஸாக பெண்கள் மீது ஆசிட் வீசுவது, வன்புணர்ச்சிக்குள்ளாக்குவது. இது இப்போதுள்ள ஃபேஷன் என நினைக்கிறேன். ஏற்கனவே நடந்ததுதான், இப்போது அதிகம். இந்த மனநிலை மாற்றத்திற்கு காரணம் யார்? எப்போதும் பெண்கள் மீதுதான் (உடல் + அரசியல்) உடலரசியல் நிகழ்த்தப்படுகிறது. மீடியாவுக்கும் இதில் பங்கு உண்டு. ஆனால் மீடியாகாரர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.   
இன்னொன்றையும் எழுதிவிடுகிறேன்
சிவகாசிக்கு பஸ் ஏறலாமென சாத்தூர் பஸ் ஸ்டாண்டுக்கு வந்தோம். ஒரு பத்து நிமிடம் கழித்து பஸ் வந்தது, உட்கார்ந்தோம். வண்டியும் புறப்படத் தயாராக இருந்தது. பக்கத்தில் விருதுநகர் போகும் பஸ் நின்றுயிருந்தது, அதில் அழகான ஒரு பெண்ணைப் பார்த்தேன், பக்கத்தில் அவள் அம்மா. அவளைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். வடிவமைக்கப்பட்ட முகம், ரொம்ப நாள் கழித்து ஒரு பெண்ணை பார்த்துக் கொண்டேயிருக்கணும் போலத் தோன்றியது. எங்கள் பஸ்சை எடுத்து விட்டார்கள். பஸ் மறையும் வரை அந்தப் பெண்ணைப் பார்த்தேன். ஆனால் கடைசி வரை அவள் என்னைப் பார்க்கவில்லை. திரும்ப கடந்தது காலம் மட்டுமல்ல பஸ்சும்.
பின்குறிப்பு: இந்தப் புகைப்படம் மார்ச் 2011 –ல் எடுத்தது. கோவில்பட்டியில் வாழும் கள்வர் இனத்தை சேர்ந்தப் பாட்டி இவர். பாட்டிக்கு 100 வயசாகிறது. ஒரு ஆவணப் படம் விஷயமாக அங்கே போன போது எடுத்தது.

No comments:

Post a Comment