அரானா பக்கம்

Sunday 3 March 2013

பார்வையாளர்களில்லாத நாடகங்கள் – 8


(இரவு 16/02/2013 – 17/02/2013 காலை)
டிவி பார்த்துக் கொண்டேதான் தூங்கியிருக்கிறேன். அதுவும் இந்தியஆஸ்திரேலியா 1986 - ஆம் ஆண்டு விளையாடியது.
நான் புல் போர்த்திய இடத்திற்கு போகிறேன். அங்கே ஆயிரம் அடி ஆழத்தில் பள்ளமுள்ளது. விழுந்தால் உயிர் இருக்காது. இதில் இன்னொரு விஷயத்தை கடையில் எழுதுகிறேன். மறுநாள் நானும் என் நண்பனும் (அவன் முகத்தை இதற்கு முன் நான் பார்த்ததில்லை), ஆனால் இருவரும் டிரவுசர் சட்டை போட்டுருக்கிறோம். இடம் ஊட்டி மாதிரியிருக்கு. அந்த இடத்திற்கு போகிறோம். அவனும் நானும் விளையாடிக் கொண்டுருந்தோம். என்ன விளையாட்டு என்று தெரியவில்லை, ஆனால் விளையாடினோம். திடீரென்று புல் தரை அப்படியே எங்களை அந்தப் பள்ளத்துக்கு இழுக்கிறது. எங்கள் கண்களில் மரண பீதி. பள்ளத்தில் தொங்கி கொண்டிருந்தோம். அந்தப் பக்கம் ஆள் நடமாட்டமே இருக்காது. புல் எங்கள் கைகளைப் பிடித்துள்ளது. பனியால் அந்தப் பள்ளம் மூடியுள்ளது. எங்கள் சத்தம் பள்ளத்திலே விழுகிறது.
அந்த இன்னொரு விஷயம் என்னவென்றால், நேற்று அதே இடத்திற்கு தனியாக நான் செல்லும்போது புல் என்னை இழுத்தது, ஆனால் தப்பித்துவிட்டேன். இன்று தனியாக இல்லை.
இன்னொரு கனவையும் சேர்த்து எழுதிவிடுகிறேன்.
இதுவும் அமானுஷ்யமான கனவுதான்.
(19/02/2013 மதியம்)
காலையில் எட்டு மணிக்கே கரண்ட் போச்சு. அடக்க முடியாதக் கோபத்தில் இருந்தேன். சரின்னு எழுத்தாளர் அகதா கிறிஸ்டி எழுதிய ‘THE SECRET ADVERSARY’ த்ரில்லர் நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன். அப்படியே தூக்கம் வந்துவிட்டது.
அப்படியே கனவும்
நான் ஒரு மலையும் காடும் சேர்ந்த இடத்திற்கு செல்கிறேன். பேக் ஒன்றைத் தோளில் மாட்டியுள்ளேன். சில கட்டிடங்கள் இடிந்த நிலையில் இருந்தது. பெரியவர் ஒருவர் எனக்கு அந்த மலையை சுற்றிக் காட்டினார். ஐம்பது வயதைத் தாண்டியத் தேகம். தென் மாவட்டக்காரரென்று பேச்சில் தெரிந்தது. இதற்கு முன் அவரை நான் பார்த்ததில்லை. திடீரென்று கனவில் வந்தார். முள் செடிகள் மலை முழுவதும் நிரம்பியிருந்தது. அவர் என்னை ஒரு குகைகுள் இழுத்து சென்றார். என்னால் அந்தக் குகைகுள் செல்லமுடியவில்லை. என் உடம்பு அப்படி. பின் நான் அவரிடமிருந்து விடைபெற்றேன். ஒரு கிணற்றைத் தாண்டிதான் திரும்பிபோகும் வழி வரும். அந்தக் கிணறு பார்ப்பதற்கு படு பயங்கரமாக இருந்தது. நெஞ்சில் திக் திக் என்றது. உள்ளேயிருந்து அனகோண்டா போல பெரிய பாம்பு வந்து என்னை விழுங்குவது போலிருந்தது. எப்படியோ கிணற்றைத் தாண்டித் தப்பித்தேன். இடிந்தக் கட்டிடங்களில் பலர் கும்பலாக தண்ணி அடித்துக் கொண்டிருந்தனர். இப்படிதான் வரலாற்று இடங்களை நாம் அசிங்கப்படுத்துகிறோம், என்று எழுதினால் எனக்கு மிரட்டல் கடிதம் அல்லது இமெயில் வரலாம். கனவை மட்டும் எழுதுவோம்.
(இன்னும் கனவுகள் வரும்)

No comments:

Post a Comment