அரானா பக்கம்

Thursday, 12 July 2012

முரண்பாடு - 3


பூம்புகார் நினைவுகள்

சமீபத்தில் புதுமணத் தம்பதிகள் மூலம் பூம்புகார் போக வாய்ப்பு கிடைத்தது. முதலில் கும்பகோணம் போனோம். சாத்தான்களின் வாழுமிடங்களில் ஒன்று, அதாவது தெய்வங்கள் மற்றும் கோவில்கள். அதன்பின் திருமணஞ்சேரி என்ற 

கோவிலுக்கு போனோம். எனக்கு அதுதான் முதல் தடவை, ரொம்ப பிரசித்திப்பெற்ற கோவிலென்று சொன்னார்கள். முதலில் கோவிலுக்கு  உள்ளே செல்லவில்லை. வினோத் (மாமா பையன்) போன் செய்து சாமி கும்மிட ரொம்ப நேரம் ஆகும் நீ உள்ள வா என்றான். சரி உள்ளே போனேன். கல்யாணம் வயதிலுள்ள எல்லா பெண்களும் வரிசையாக மாலையணிந்து உட்கார்ந்திருந்தார்கள். ஐயர் அவர்களிடம் பல உரைகளை சொல்லிக்கொண்டுருந்தார். ரொம்ப நேரம் எனக்கு புரியவில்லை அடுத்த நிமிடத்தில் புரிய ஆரம்பித்தது. ஒரு பெண்ணுக்கு திருமண ஆசை வருவது இயல்பு, ஆனால் அங்கே அது வியாபாரமாக நடக்கிறது. ஒரு தனிமனிதனின் ஆசை அங்கே எல்லோருக்கும் சொல்லப்படுகிறது. இந்தக் கோவிலுக்கு வந்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்கிற அவநம்பிக்கை அந்தப் பெண்களிடம் காணப்பட்டது. பெற்றோருடைய மனநிம்மதிக்காக பிள்ளையின் மனநிம்மதியை குலையச்செய்கிறார்கள், இவர்களுக்கு உறுதுணையாக சாமிகளும் ஐயர்களும். இந்த உலகத்தில் எல்லாமே விந்தையாக இருக்கிறது. சரி இதைப் பற்றி அதிகம் பேசவேண்டாம் எனக்கு கோபம் தலைக்கேறிவிடும்.
பூம்புகார் – க்கு செல்வோம். மதியம் 1.00 மணிக்கு பூம்புகார் சென்றோம். வெயில் வாட்டி வதைத்துவிட்டது. ஜெமினிகணேஷன் நடித்த பூம்புகார் படத்தைகூடப் பார்த்ததில்லை. ராமேஸ்வரம், திருசெந்தூர், கன்னியாகுமரி, சென்னை இப்படி நான் பார்த்தக் கடலை விட இந்தக் கடல் சற்று வித்தியாசமாக இருந்தது. கரையோரம் பெரிய பெரிய கல்கள் இருந்தது, அதை தாண்டி கடலுக்கு போனோம். 

அலைகள் மிக மிதமானதாக இருந்தது. அது ஒரு அழிந்த நகரம் என்ற சாயம் அதன்  மீது பூசியிருந்தது. தமிழக அரசு இந்த இடத்தை ஏன் அனாதையாக விட்டது எனத் தெரியவில்லை. வரலாற்று சிறப்புமிக்க பூம்புகார் நகரம் அடுத்த தலைமுறைக்கு வெறும் சுற்றுலாதலமாகத்தான் தெரியும். அங்கே கருவாடு விற்பது பெண்கள் மட்டும் தான். ஆனால் நாங்கள் இருந்தவரை பயணிகள் யாரும் கருவாடு வாங்கவில்லை. ஒரு நாள் அவர்களுக்கு எப்படி நகருகிறது சந்தோஷமாக அல்லது கவலையாக இப்படி பல கேள்விகள். மீனவர்கள் யாரும் அங்கு இல்லை. அந்த கடும்வெயில் அவர்களுக்கு பழகிப்போனதாகிவிட்டது. எல்லோரும் கடலில் கால் நனைத்துக் கொண்டார்கள், ஆனால் நான் அதை விட்டு ஒதுங்கிதான் நின்றேன். எப்படியோ என்னையும் தொட்டுச் சென்றது அலைகள். கலங்கரை விளக்கு ஒன்று இருக்கிறது. அதை யார் கவனிக்கிறார் என்று தெரியவில்லை. கண்ணகி கோவலன் வாழ்ந்த இடம் இதுதான் என்று மற்றவர்கள் சொன்னால்தான் தெரியும். காதலர்களுக்கு மிகச் சிறப்பான ஒரு இடமாக விளங்கிறது பூம்புகார். இதே பூம்புகார் சென்னைக்கு அருகில் இருந்தால் இப்போது அதன் மதிப்பு எப்படியிருக்கும் நினைத்துப்பார்க்கிறேன்.

புகைப்படமும் எழுத்தும்

அரானா

No comments:

Post a Comment