அரானா பக்கம்

Saturday, 30 June 2012

சிறப்புக் கட்டுரை


காட்சிகளாலானக் கவிதை
கவிதை எழுதலாம் என்றுதான் தோன்றியது, ஆனால் கட்டுரையாக உருமாற்றியது என் கைகள். கவிதை எழுத தெரிந்த நாள்முதல் நான் அடிக்கடி யோசிக்கும் ஒரு விஷயம் முதன்முதலில் கவிதையை எழுதியது யார், எதை வைத்து எழுதினார், எந்த சூழ்நிலையில் எழுதினார், கவிதை எழுதத் தூண்டியது யார், காதலைப் பற்றியதா, இயற்கையைப் பற்றியதா என எனக்குள் இத்தனைக் கேள்விகள். விடையை அறிந்து கொள்ளும் ஆர்வம் மட்டும்தான் உள்ளது. தேடிச் செல்லும் ஆர்வம் இல்லை. எனக்குத் தோன்றுவது அந்த முதல் கவிதை ஒரு காட்சியைப் பார்த்து பின்பு ரசித்து எழுதியிருக்கலாம் என்று, எல்லோருக்கும் இருக்கும் ஒரு குணமிது அழகான ஒரு குறிஞ்சி மலரைப் பார்க்கும்போது என்ன இது இந்தப் பூ எவ்வளவு அழகாக இருக்கிறது இதைப் பற்றி கவிதை எழுதவேண்டும் என்று தோன்றும். அதன் பின்புதான் அந்தப்பூவைச் சுற்றி நம் கற்பனை சூழலும். வார்த்தைகளைத் தேடாமல் விரல் வழியில் காகிதத்தில் வரையப்படும் மொழிகள். அழகான பெண்ணைக் கண்டாலோ அல்லது முதல் காதல் பூக்கும் தருவாயில் அந்தப் பெண்ணின் அழகை ஆண் வர்ணிக்கும் போது மொழி அவனுக்கு நண்பனாகிறது, எழுத்துக்கள் அவன் சொந்தங்களாகிறது. ஒரு காட்சி நம் மனதை மகிழ்ச்சியடையச் செய்யும், மற்றொரு நம்மை துக்கமடையச் செய்யும். இந்த இரண்டு காட்சியைப் பார்க்கும் ஒரு கவிஞன், அவனடையும் மகிழ்ச்சி, வேதனை, துக்கம் இவையே கவிதையாகிறது. கவிதை எப்போதும் அதன் இருப்பிடத்தை வெளிக்காட்டுகிறது. தன் இடத்திற்கு ஏற்றாற்போல் தன்னை உருமாற்றுகிறது.
ஒரு நீண்ட ஆயிரம் பக்கமுள்ள நாவலை நான்கு வரிகளில் கவிதையாய் எழுதலாம். ஒரு புகைப்படத்தைப் பார்க்கும்போது ”என்னடா இது ஒரு ஹைக்ஹு படிச்ச மாதிரி இருக்குடா” இதுதான் கவிதைக்கும் காட்சிக்கும் உள்ள ஒற்றுமையும் வேற்றிமையும். காட்சி ஒளிகளாலானது கவிதை மொழிகளாலானது. நவீனக் கவிதை இன்று புது புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் வடிவம் மெருகேறியுள்ளது. உடனே வாசிக்கத்தூண்டுகிறது, எழுதத்தூண்டுகிறது. யாரும் கவிதை எழுதலாம் என்கிற துணிச்சலைத் தருகிறது.
     காட்சி எப்படி கவிதையானது என்பதற்கு இரண்டு உதாரணங்கள்:

என் பார்வையைப்பறித்து சூடிக்
கொண்டுபோனது ஒரு காட்சி
காக்கி உடையில் ஒரு பெண் போலீஸ்
பஸ்ஸுக்கு காத்திருந்தாள் தன்
கைக் குழந்தை தோள் சாய்த்து!
பாதசாரி
திரு. பாதசாரியின் இந்தக் கவிதை ஒரு சிறுகதைப் படித்த அனுபவத்தை தருகிறது. கையில் குழந்தையுடன் பஸ்ஸுக்காக பெண் போலீஸ் காத்திருந்தாள் என்ற சாதாரண நிகழ்வு இப்பொழுது ஒரு அழகியல் உணர்வோடு எழுதப்பட்டுவிட்டது.




அலைகளைச் சொல்லி
பிரயோஜனமில்லை
கடல் இருக்கிறவரை
நகுலன்

கடலை தினமும் பார்க்கும் மீனவன் கூட இப்படி சிந்திப்பதில்லை. மிகப்பெரிய ஒரு விஷயத்தை மூன்று வரிகளில் அனைவருக்கும் புரியும்படி சொல்ல கவிஞர்களாலும் கவிதையாலும் மட்டுமே முடியும்.
இரண்டு கவிதைகளும் நமக்கு காட்சிகளால் மனதில் பதியப்படுகிறது. ஆனால் கவிஞர்களுக்கு கவிதை எழுதக் காரணமாகியுள்ளது.
அப்படி என்றால் மனிதனின் சிந்திக்கும் திறன் என்று நீங்கள் கேட்கலாம். அறிவியல் கூற்றுப்படி ஒருவன் வாழ்வில் சுற்றி நடந்த சம்பவங்களை சுற்றியே அவனது இயல்பு இருக்கும். எந்தச் சம்பவம் அவனது மனதைப் பாதிப்புக்குள்ளாகுதோ அந்நேரத்திலிருந்து மனது ஓரிடத்தில் நிற்க மறுக்கும், மூளை சிந்திக்க ஆரம்பிக்கும். அது மிகபெரிய சக்தியாக உருவெடுத்தால்தான் படைத்தல் என்றொரு நிகழ்வு நடைபெறும். வார இதழ்களில் வாசகர்கள் எழுதும் கவிதைகளைப் படிக்கும் நம் மக்களிடம் இப்படியொரு ரசனையை ஏற்படுத்தியிருக்கிறது கவிதை.
புகைப்படங்கள் - அரானா

No comments:

Post a Comment