அரானா பக்கம்

Sunday 28 September 2014

மறக்கமுடியாத படம்

பழைய படம் பார்க்க நான் எப்போதும் ஆசைப்பட்டதில்லை. முக்கியமாக எம்ஜிஆர், சிவாஜி படமென்றாலே டிவியை ஆஃப் செய்துவிட்டு சும்மா உட்கார்ந்திருக்கலாமென்று நினைப்பேன். நெஞ்சம் மறப்பதில்லைபடத்தை மட்டும் ரொம்ப நாளாக பார்க்கவேண்டுமென்று நினைத்தேன், நேற்றுதான் டிவியில் பார்த்தேன். 1963 ஆண்டு படம் வெளிவந்துள்ளது. ஆனால் ரசிக்கும்படியான படம். நம்பியார், கல்யாண் குமார், தேவிகா இவர்கள் கதையின் மாந்தர்கள். நம்பியார் ஊரில் மிகப்பெரிய ஜமீந்தார், பணத்தால் எதையும் வாங்கிவிடலாமென்ற மனம் கொண்டவர். தன்னை விட வயதில் குறைந்தப் பெண்ணை கல்யாணம் செய்துகொள்கிறார். அவருடைய மகன் கல்யாண் குமார், நம்பியார்-க்கு அடுத்து அந்த ஊரின் ஜமீனாக வரப்போகிறவர். நம்பியார் கெளரவம், அந்தஸ்து பார்ப்பவர். கல்யாண் குமார் தன் வயலில் வேலைப் பார்க்கும் ஒருவருடைய மகளை விரும்புகிறார். இவர்களுடைய காதல் காட்சிகள் மிக அழகாகவும் ரசிக்கும்படியுள்ளது. தேவிகாவின் முகபாவனைகள், இருவரும் பேசும் வசனங்கள் அனைத்தும் அந்தக் காலக் காதலை எளிமையாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் கல்யாண் குமார் மிகைப் படுத்தப்பட்ட முகபாவனைகளை தவிர்க்க முற்படுவதில்லை. ஒரு கட்டத்தில் இவர்கள் காதல் நம்பியாருக்கு தெரியவர அவர் இருவரையும் பிரிக்க முற்படுகிறார். இதற்கிடையில் தேவிகாவுக்கு இன்னொரு கல்யாணம் நிச்சயிக்கப்படுகிறது. இருவரும் துணிந்து ஊரைவிட்டு ஓடப் பார்க்கிறார்கள், அப்போது நம்பியார் துப்பாக்கியால் தேவிகாவை சுடுகிறார், தேவிகாவும் சாக அந்த வேதனையில் கல்யாண் குமாரும் சாகிறார். இந்தக் காட்சிகள் கல்யாண் குமார் நினைவில் இன்றும் இருப்பதாகவும் நான் மறுபிறவி எடுத்துள்ளதாவும் நம்புகிறார். அதே ஜமீந்தார் வாழ்ந்த வீடுக்கு கல்யாண் குமார் வருகிறார். மிகவும் பாழடைந்து சிலந்தி வலையால் பின்னப்பட்டு, அந்தப் பின்னலில் கடந்தகாலம் சிக்கித் தவிப்பதை கல்யாண்குமார் உணருகிறார். அப்போது அங்கே ஒரு வயதான பெரியவர் ஒருவர் வருகிறார், கல்யாண் குமார் அவரிடம் ஜமீந்தாரைப் பற்றி விசாரிக்கிறார். அது நாந்தான் என்று சொல்ல கல்யாண்குமாருக்கு மேலும் அதிர்ச்சி. முன்ஜென்மம், மறுபிறவி போன்ற விஷயங்கள் மீது கல்யாண்குமாருக்கு நம்பிக்கை வருகிறது. இப்போதும் நம்பியாருக்கு இவர்களின் காதல் மீது கோபம் வெறுப்பு உண்டாகிறது. மீண்டும் அவர்களைப் பிரிக்க ஆசைப்பட்டு கடைசியில் புதைக்குழியில் சிக்கி சாகிறார்.
என்னைப் பொறுத்தவை இந்தப் படத்தின் ஹீரோ நம்பியார் தான். ஜமீந்தார் வேடத்தில் மிடுக்கான அதே நேரம் கெத்து குறையாமல் நடித்திருக்கிறார். கடைசியில் வயதான தோற்றத்திற்கேயுரிய உடல் மொழியை தன்னுள் கொண்டுவந்து பார்வையாளர்களைப் பயமுறுத்துகிறார். 110 வயதின் தோற்றம் எப்படியிருக்கும் என்ற கேள்விக்கு அவரே சாட்சி. மேக்கப் மேனின் உழைப்பும் இதில் அதிகம். நடிகர் நம்பியார் தான் ஒரு தேர்ந்த நடிகன் என்பதை படத்திற்கு படம் அவர் ஏற்று நடிக்கும் கதாப்பாத்திரங்கள் மக்களுக்கு மிகவும் பிடித்துப்போயிருக்கிறது. எந்த கதாப்பாத்திரங்களுக்கும் அவர் உயிர் கொடுத்துவிடுகிறார். கல்யாண் குமார் அப்பவே தேவிகாவுக்கு அப்பா கேரக்டர் போல் தோற்றமளிப்பது, சகிக்கவில்லை. இயக்கநர் திரு.ஸ்ரீதர் திரைக்கதைக்கு ரொம்பவே மெனக்கெடுத்திருக்கிறார். நெஞ்சம் மறப்பதில்லை படம் குழப்பமில்லாமல் இருப்பதற்கு இயக்குனரின் திரைக்கதையே காரணம். அவர் தனது தொழில்நுட்ப கலைஞர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனம் எடுத்திருக்கிறார். படத்தின் ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் நேர்கோட்டில் பயணிக்கிறது. பழைய படங்களில் நாடகத்தின் சாயல்கள் அதிகமிருக்கும் இந்தப் படத்திலும் அதை தவிர்க்கமுடியவில்லை. எனக்கு இன்னொரு பிடித்தமான விஷயம் பாடல்கள். கவிஞர் திரு.கண்ணதாசன் அவர்கள் தான் படத்தின் பாடல்கள் அனைத்தியும் எழுதியுள்ளார். கடைசி ரசிகன் வரை படம் சென்றடையக் காரணம் அவர்தான். அவர் எழுதிய மிகச்சிறந்த பாடல்களில்நெஞ்சம் மறப்பதில்லைபாடலும் அடங்கும். காதலர்கள் சந்திக்கும் போதெல்லாம் பாடல்கள். நெஞ்சம் மறப்பதில்லை இரண்டு வெர்ஷனில் இருந்தாலும் அலுக்கவில்லை, வார்த்தைகள் மனதில் பதியவைக்கிறது. பி.பி.ஸ்ரீனிநிவாஸ் மற்றும் பி.சுசிலாவும் வரிகளுக்கு ஒலியை அல்ல குரலுயிர் கொடுத்துள்ளனர். இரட்டை இசையமைப்பாளர்களான திரு.விஸ்வநாதன் திரு.ராமமூர்த்தியின் பின்னணி இசையும் படத்தை வேகத்தை குறைக்கவில்லை. அப்பவே ரொம்ப பிளான் பண்ணி படத்தை எடுத்திருக்கிறார்கள். அதனால்தான் படம் இன்று வரை பேசப்படுகிறது. பணக்காரர் அல்லது ஜமீந்தார்களின் அட்டகாசம், கீழ் ஜாதி மக்களை கொடுமையான முறையில் ஒடுக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை காட்சிகள் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குனர். படத்தின் இன்னொரு பிடித்தமான விஷயம் நாகேஷ். தன் காதலித்தப் பெண்ணை மறக்கமுடியாமலும் அதே நேரத்தில் ஜமீந்தார் பேச்சைத் தட்டாமலும் இருக்கும் வேதனையை முகத்தில் வெளிக்காட்டுகிறார். அது சிரிப்பான காட்சியாக இருக்கிறது. அதே நேரம் ஹீரோவாக இருந்தால் பரிதாபப்படுவோம். தமிழ் சினிமா வரலாற்றில் இந்தப் படம் முக்கியமான படம்தான் அதை மறுப்பதற்கில்லை. அடுத்து வரும் இளையத் தலைமுறைக்கும் இந்தப் படம் பிடிக்கும். அப்போதும் சரி இப்போதும் சரி காதலுக்கு எதிர்ப்பு மட்டுமே மிஞ்சியுள்ளது. காதலுக்காக உயிர்த் தியாகம் செய்வதெல்லாம் என்னைப் பொறுத்தவை கேலிக்குரியவை.
FANTASY THIRILLER GENRE வகைப் படங்களை ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்திலிருந்தே நம் தமிழ் சினிமா சொல்லிக்கொண்டு வந்திருக்கிறது. அதுவும் முன்ஜென்மம் என்றொரு விஷயத்தை அடிப்படையாக வைத்து வெளிவந்  படங்கள் தமிழில் குறைவுதான். தெலுங்கு சினிமாவில் இன்று வரை இந்த மாதிரியான படங்கங்கள் வெளிவந்துகொண்டுதானிருக்கிறது, வெற்றிப் படமாகவும் அமைந்துவிடுகிறது. கலைபுலி சேகர் இயக்கி நடித்த ஜமீன்கோட்டை படமும் முன்ஜென்மம் பற்றி பேசிய படம் தான். இந்தப் படமும் திகில் கலந்த காதல் கதைதான், முன்ஜென்மத்தில் ஒன்று சேராமல் போன காதர்கள் மறுபிறவியில் ஒன்று சேர்வார்கள். காதலைத் தவிர தமிழ்சினிமா சிந்திக்கப் போவதில்லை. ஆனால் இதே GENRE வகையை ஹாலிவுட் காரர்கள் ரொம்ப அட்வாட்ஸாக எடுத்திருப்பார்கள். ஒருவன் கனவுக்குள் இன்னொருவன் நுழைவது, முன்னால் நடப்பதை TIME MACHINE மூலம் முன்பே காண்பது போன்ற அதீத கற்பனையால் உருவாகிய படங்கள் அங்கே அதிகம். உதாரணத்திற்கு INCEPTION, LOOPER. ஹாலிவுட் காரர்ளோடு நம் தமிழ் சினிமா கோலிவுட் காரர்களுடன் ஒப்பிடவில்லை. நம் கலாச்சாரம், சமூகம், மக்களுக்கு ஏற்றாற் போல்தான் நாம் படம் எடுக்கமுடியும். நம் மக்கள் எல்லா வுட் படத்தையும் பார்க்கவும் செய்வார்கள், அதைப் பற்றிய விமர்சனத்தையும் முன் வைப்பார்கள், ஏனென்றால் சினிமா என்பது பொது மொழியே.

No comments:

Post a Comment