அண்ணன் பையனுக்கு உடம்பு சரியில்லை
என்று போன் வந்தது. சரி எப்போதும் போல காய்ச்சலா இருக்கும் என்று நினைத்தேன். ஆனால்
விஷயம் வேறு, அவனை மதுரை மீனாட்சி மிஷன்-ல பெட்ல சேர்த்து, பிளட் டெஸ்ட் எடுக்குறாங்க
தெரிஞ்சவுடன் நானும் அம்மாவும் போனோம். ஆறாவது மாடியில இருக்கிறார்கள் எனத் தெரிந்தது.
அங்கே குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை மையம் இருந்தது. இங்க இருக்காது என்று நினைத்தேன்,
ஆனால் அதுதான் உண்மை. அவனுக்கு எதிர்ப்புசக்தி குறைவுதான். ஆனால் அவனுக்கு வெள்ளையணுக்களும்,
சிவப்பணுக்களும் உற்பத்தியாகமல் இருப்பதுதான் அதற்குக் காரணம் என்று டாக்டர்கள் சொன்னார்கள்.
அவனைப் பற்றி சிறுகுறிப்பு:
பெயர் : ஜெய்கணேஷ், வயது : 4,
படிப்பு : எல்கேஜி, எடை : 9 கிலோ. காலை எழுந்தவுடன் பல் விலக்காமல் மாத்திரை சாப்பிடுவது.
பின் டீ, ஒரு இட்லி அல்லது ஒரு தோசை. மதியம் கொஞ்சம் சாதம். மாலை பூஸ்ட்,ஒரியோ பிஸ்கட்
இரண்டு, போகோவில் பீம் நாடகம், ஐஸ் ஏஜ்-1,2,3., ஜி-போர்ஸ் இதெல்லாம் தினமும் குட்டிடிவியில்
பார்க்கும் படங்கள். இரவும் ஒரு தோசை. விளையாடுவது அரிது. வேர்வைத் துளிகள் அவன் உடம்பிலிருந்து
வராது. பிளாஸ்டிக் கார்கள், பொம்மைகளுடன் அரைமணி நேரம் அன்பு காட்டுவது. 10 திருக்குறள்
சொல்லி பரிசு வாங்கினான். என் அக்கா பெண்களும், எதிர் வீட்டுப் பாப்பா ஆஷிகா இவர்கள்
தான் விளையாட்டு தோழிகள்.
அவனுக்கு ஏற்கனவே இரத்தம் இல்ல,
இதுல பிளட் டெஸ்ட். ஆனா டாக்டரால கூட சரியான முடிவுக்கு வரமுடியல. பின் நாளைக்கே எலும்பிலிருந்து
ஒரு சின்ன டெஸ்ட் எடுக்கணும்னு சொன்னாங்க. எல்லாருக்கும் ஒரு நிமிஷம் ஆடிட்டோம். அந்த
உடம்புக்கு இது அதிகம் என சொன்னேன். அண்ணன் அண்ணி அம்மா பெரியம்மா அக்கா எல்லார் முகத்திகலும்
கண்ணீர் கலந்த கண்கள். நான் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. இவர்கள் அழுவதால் அவன் குணமாகிவருவதில்லை.
அழுகை ஒன்றுதான் ஒப்பற்ற தோழன் என நினைக்கிறேன்.
பின் அவனிருந்த அறைக்குச் சென்றேன்.
கிட்டத்தட்ட பத்துக் குழந்தைகளுக்கு மேல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுக்கொண்டுருந்தனர்.
எனக்கு பயமா இருந்தது ஏதோ தனி உலகத்தில் இந்தக் குழந்தைகள் வாழ்கிறார்கள். எதிர்கால
இந்தியா நோய்வாய்பட்ட ஒரு சமூகமாகிருக்கும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம். அந்தக்
குழந்தைகளுக்கு பத்து வயதுக்குள்ளதானிருக்கும். அவர்கள் உறவு மருந்து, மாத்திரையுடன்.
நான்கு சுவர்களில் அவர்கள் நாட்கள் கழிகிறது. ஒருவர் தன் குழந்தைக்காக இரண்டு மாதங்களாக
மருத்துவமனையில் தங்கியிருக்கிறார். குழந்தைகளை எளிதாக பெற்றுக்கொள்ளும் பெற்றோர்கள்,
அவர்களை ஆரோக்கியமாக வளர்க்க தவறிவிட்டார்கள். சுவையான உணவை தருகிறோமே தவிர சத்துள்ள
உணவை தரமுடியவில்லை.

No comments:
Post a Comment