அரானா பக்கம்

Saturday 18 February 2012

அதிர்வலை



காலத்தில் மாறாதது பருவங்கள், அதுவும் பள்ளிப் பருவம். மிக சுவாரசியமான ஒன்று. Pre K.G முதல் +2 வரை எதுக்காக படிக்கிறோம் எதுக்காக பரீச்சை எழுதுகிறோம் என பலருக்கும் தெரியவில்லை. எல்லாமே ஒரு விளையாட்டு போல தோன்றும். இதில் பாடங்கள் ரீதியாக ஆசிரியர் நியமிக்கப்பட்டு எந்தப் பாட ஆசிரியர் நன்றாக நடத்துகிறார், இன்று எந்த ஆசிரியர் பள்ளிக்கு வரவில்லை எனப் பார்த்து கிடந்து கடந்ததுதான் பள்ளிப் பருவம். இதில் வகுப்பில் முதல் மூன்று ரேங்க் வாங்கும் மாணவர்களை அனைத்துப் பாட ஆசிரியர்களுக்கும் பிடித்துப்போய்விடும். ஃபெயில் ஆகும் மாணவர்களை ஆசிரியர் கண்டிக்கவும் செய்வார்கள் வருத்தமும் படுவார்கள். அதிலும் கணக்கு பாடம் எனக்கு அது காட்டமான பாடம். +2 வரைக்கும் கணக்கும் பிடிக்காது அதை நடத்தும் வாத்தியாரையும் பிடிக்காது. அது ஒரு புரியாத கேள்வி கேள்விப்படாத பதில். வகுப்பில் எல்லோரும் ராமானுஜம் ஆகிவிடமுடியாது. ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்கிற்கு பதில் எழுதியவன் நான். இதில் அடித்த காமெடி என்னவென்றால் சிறப்பு வகுப்புகள் என்று படிக்காத மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து படிக்கச் சொல்வார்கள் அன்று கிரிக்கெட் அல்லது பிடித்தமான படம் போட்டால் போச்சு. சிறப்பு வகுப்பு சிரிப்பு வகுப்பாகிவிடும். இது சில அல்ல பல தனியார்பள்ளிகளில் நடத்தப்படுகிறது. “ நல்லாப் படிகிற பிள்ளை எங்கேயும் படிக்கும் “ இது பொதுவாக 1 மார்க் வாங்கும் பிள்ளைகளைப் பார்த்து பெற்றோர்கள் சொல்வது. மார்க் கம்மியாக வாங்குபவர்களுக்கு வேறு பழமொழிகள் உண்டு. காரணம் ”மறதி” பள்ளிப் பருவத்தின் நோய். ஆங்கிலத்தில் (Poem, Essay), தமிழில் (திருக்குறள், மனப்பாடப் பகுதி), அறிவியலில் (5 மற்றும் 10 மார்க் கொஸ்டீன்), சமூக அறிவியலில் (மன்னனின் பெயர், போர் நடந்த ஆண்டு ஒப்பந்த ஆண்டு) என நீள்கிறது பட்டியல். சராசரியை விட அதிகமான ஞாபக சக்தி உள்ளவர்கள் மட்டும்தான் 1, 2, 3 ரேங்க் மாணவர்கள். முதலில் ஆசிரியர்கள் இருக்கும் பாடங்கள் அனைத்து மாணவர்களுக்கும் புரியும்படி நடத்தவேண்டும். ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு மாணவனையும் அடையாளம் காணவேண்டும். நீங்கள் அடையாளம் காணும் மாணவர்கள் நம் நாட்டின் அடையாளம் ஆவார்கள். இப்படியான ஆசிரியரைதான் மாணவர்களுக்குத் தேவை. இப்போதுள்ள சூழ்நிலையில் இந்த உறவு எதிர்காலத்தில் எப்படியிருக்கும் என்பதே என் பயம், என் கேள்வி?
பள்ளியில் வைத்து ஒரு பெண் ஆசிரியரை மாணவன் கொலை செய்கிறான் என்றால் அந்த மாணவனின் மனநிலை எப்படியிருக்கும் என்று எல்லோரும் யோசிக்க வேண்டும். மாணவர்களை கண்டிக்கக் கூடாது என்று சொல்வது நியாயம். ஆனால் கண்டிக்கவே கூடாது என்பது நியாயமில்லை. தவறு செய்த உடனே தண்டனை வழங்கவேண்டும் என்று சொல்லவில்லை, மறுபடியும் அந்த தவறு நடக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் என சிந்திக்க வேண்டும். எல்லா தவறுகளுக்குத் தண்டனைத் தீர்வாகாது. நான் முதலில் கூரியது போல் ஒவ்வொரு மாணவனை அடையாளம் காணவேண்டும். வகுப்பில் பாடம் மட்டும் நடத்திவிட்டால் போதாதது. அவர்களின் உலகை புரிந்து கொள்ளவேண்டும். நம் பாடத்திட்டங்கள் ஒன்று பெரிய எரிமலையோ அல்லது இமயமலையோ இல்லை. அது தெரிந்தும் நீங்கள் தவறு செய்வது நம் சமூகத்தை இழிவுப்படுத்துவதற்கு சமம். மாணவர்கள் தற்கொலை அதிகமாக இருக்கும் நாடு இந்தியாதான் என்று நினைக்கிறேன். அதுவும் தமிழ்நாட்டில் தான் இந்த கொடுமை.
இரண்டு காரணங்கள்
1.   பத்தாவது அல்லது +2 பொதுத்தேர்வுகளில் தோல்வியடைந்தவர்கள்
2.   பெற்றோர் அல்லது ஆசிரியர் திட்டியதால்.
இப்படித்தான் இருக்கிறது மனநிலை. இதில் இன்னும் அழுத்தம் அதிகமானதே இந்தக் கொலை சம்பவம். பெற்றோர்களும் பிள்ளைகளின் மன உலகத்தை சுற்றிப் பார்க்க வேண்டும். அதில் எப்போது மழைபெய்கிறது, வெயிலடிக்கிறது எனத் தெரியவேண்டியக் கட்டாயத்தில் பெற்றோர்கள். இனிமேல் ஆசிரியர் – மாணவர் உறவு ஒரு சடங்காக மட்டுமேயிருக்கும் என்பது உறுதி. யாருக்கு யார் பயபடுவார்கள் எனத் தெரியவில்லை. அடிக்கடி நடக்கும் கொலைகளைப் பார்த்துதான் இன்னொரு கொலை நடக்கிறது. கொலை செய்த பையனின் எதிர்காலம் வீணாகிவிடக்கூடாது. அவனுக்கு தேவைத் தண்டனை அல்ல மனமாற்றம். அதே நேரம் இது போன்ற சம்பவங்கள் நடக்கமலிருக்க மாணவர்களும் ஆசிரியர்களும் சேர்ந்துதான் முடிவு எடுக்க வேண்டும். அந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
அரானா     
     

1 comment: